வேறு பெயர்கள்: கூவைக் கிழங்கு, கூகைக் கிழங்கு, கூவாமாக் கிழங்கு. தாவரவியல் பெயர்: Maranta Arundinacea. (Old name: Curcuma Angustifolia). குடும்ப பெயர்: Marantaceae.
ஆங்கில பெயர்: East Indian Arrow Root. தெலுங்கு: Ararut-Gaddalu. மலையாளம்: Kuva. ஹிந்தி: Tikhar. கன்னடம்: Koove-Gedde. வளரியல்பு: சிறு செடி.
தாவரத்தின் புற அமைப்பு விளக்கம்: தனி இலைகள் இரண்டு வரிசைகளில் அமைந்துள்ளன. பொய்த் தண்டு குட்டையாகவும், இலைக்காம்பின் அடிப் பகுதிகளால் மூடப்பட்டுமுள்ளது. மட்டநிலத்தண்டிலிருந்து பல வேற்றிடத்து வேர்கள் தோன்றுகின்றன.
பயன்படும் பகுதி: கிழங்கு (இதிலிருந்து மாவு எஎடுக்கிறார்கள்). சுவை: இனிப்பு. தன்மை: தட்பம். பிரிவு: இனிப்பு.
தாவரவேதி பொருள்கள்: சர்க்கரைப் பொருட்கள் வேரில் அதிகமாக உள்ளன. செய்கைகள்: குளிர்ச்சியுண்டாக்கி, உடலுரமாக்கி, உள்ளழலாற்றி. மருத்துவ குணங்கள்: சுரம், இருமல், நீர் வேட்கை தீரும். உடலுக்கு ஊட்டம் தரும்.
நோய் தீர்க்கும் முறைகள்:
மாவு தயாரிக்கும் முறை: நன்கு முதிர்ந்த கிழங்குகளை நீரில் கழுவவும். பின் தோலை நீக்கி நன்கு அரைத்து மாவாக்கவும். ஒரு வாயகன்ற சட்டியில் நிறைய நீர் விட்டு, அதன் வாயை துணியால் கட்டி, அத்துணியை தண்ணீர் மட்டத்துக்கு கீழ் விட்டு, துணியின் மேல் மாவை கொட்டி கையால் கரைத்து கொண்டேயிருந்தால் மாவு சட்டியின் அடியே செல்லும். பின் துணியை நீக்கி விட்டு மாவை நன்றாக கலக்கி தெளிவை இருத்திடவும். இது போல் 3 முறை செய்து வடிகட்டி அடியில் காணும் மாவை வெயிலில் உலர்த்தி எடுக்கவும். இதுவே மாவு தயாரிக்கும் முறையாகும்.