Winter - அமுக்கிராக் கிழங்கு

வேறு பெயர்கள்: அஸ்வகந்தி, அஸ்வகந்தம், அமுக்கிரி, அமுக்குரவு, அமுக்கினாங்கிழங்கு, வராக காரணி, இருளிச்செடி, கிடிச்செவி, அசுவம். தாவரவியல் பெயர்: Withania Somnifera. குடும்பப் பெயர்: Solanaceae.  ஆங்கிலப் பெயர்: Winter, Cherry. தெலுங்கு: Penneru Gadda. சமஸ்கிருதம்: Ashganth. மலையாளம்: Amukkuram. ஹிந்தி: Ashgandh. கன்னடம்: Sogade-beru. வளரியல்பு: புதர்ச் செடி   

தாவரத்தின் புற அமைப்பு விளக்கம்: மாற்றடுக்கில் அமைந்த தனி இலைகள். இலைகள் சாம்பல்நிற பச்சையானவை. முதிர்ந்த கனிகள் சிவப்பாக, உருண்டையாக பழுப்பு நிறத்தோலால் மூடப்பட்டிருக்கும். தண்டு, கிளைகள் மெல்லிய உரோமத்தால்  மூடப்பட்டு இருக்கும்.

பயன்படும் பகுதி: கிழங்கு. சுவை: கைப்பு. தன்மை: வெப்பம். பிரிவு: கார்ப்பு செய்கைகள்: ஆன்மைப் பெருக்கி, வீக்கம் நீக்கி, உறக்கமுண்டாக்கி.

மருத்துவ குணங்கள்: உடலைத் தேற்றும், ஆண்மையைப் பெருக்கும்,நல்ல உறக்கத்தைத் தர வல்லது, சிறுநீரை அதிகரிக்கும், உடலின் வெட்ப நிலையை சமப்படுத்தும், பசியை உண்டாக்கும், காய்ச்சல், கட்டிகளை குணப்படுத்தும்.

நோய் தீர்க்கும் முறைகள்: 

  1. அமுக்கிரா பொடி  5 கிராம், பிஸ்தா பருப்பு, பாதம் பருப்பு, சாராப் பருப்பு வகைக்கு 3 கிராம், கசகசா 15 கிராம் இவற்றை அரைத்து 100 மி.லி. பாலில் கலந்து சர்க்கரையுடன் சேர்த்து காலையில் மட்டும் 3 முதல் 4 மாதங்கள் சாப்பிட்டு வர உடலுக்கு பலத்தையும், இளமையையும், நீண்ட ஆயுளையும் அளிக்கும்.
  2. அமுக்கிராக் கிழங்கை அரைத்து புண், கட்டி, வீக்கம் போன்றவற்றில் பற்று போட குணமடையும்.
  3. அமுக்கிராப் பொடியை தூதுவளைப்  பொடியுடன் சம அளவு கலந்து 5 கிராம் பால் அல்லது நெய்யுடன் தினமும் 2 அல்லது 3 வேலைகள் பத்தியமுடன் உட்க்கொண்டு வந்தால், நீடித்த நோய்க்கு பின் வரும் களைப்பு, சளிக்காய்ச்சல், தோல்நோய், காது மந்தம் தீரும்.
  4. அமுக்கிரா பொடியை தினமும் இரு வேளைகள் 2-4 கிராம் வீதம் தேனுடன் உடகொள்ள வாதம், கோபத்தினால் ஏற்படும் நோய்கள், உடல் பருமன், பசியின்மை நீங்கும்.
  5. அமுக்கிராப் பொடியை நெய்யுடன் கலந்து கொடுக்க, விந்துவைப் பெருக்கும், உடலுக்கு பலம் தரும்.
  6. அமுக்கிராப் பொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும், சேர்த்து 5 கிராம் வீதம் தினமும் காலை, மாலை  உட்க்கொண்டு 200 மி.லி. பசும்பால் அருந்த நரம்புத்தளர்ச்சி நீங்கும். உடல் அழகும், உறுதியும் பெருகும். 
  7. பொதுவாக அமுக்கிராக் கிழங்கு அனைவருக்கும் ஏற்ற உடல் தேற்றி மருந்தாகும்.